தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற குறைந்தது ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் முந்திரிக் கொட்டைத்தனமாக எல்லோரையும் முந்திக்கொண்டு திமுக முன்னெடுத்துவரும் பிரச்சாரம், அந்த கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

‘சொந்த காசைப் போட்டு எவ்வளவு நிகழ்ச்சிகளை நடத்துவது? நிலைமை இப்படியே நீடித்தால் தேர்தலுக்குள்ளே தெருவுக்கு வந்திடுவோம்’என அலறுகிறார்கள். எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ’விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’என்கிற பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தஞ்சை மாவட்டத்திலும், மகளிரணி செயலாளர் கனிமொழி சேலம் மாவட்டத்திலும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

நிகழ்ச்சிகளை குறிப்பாக உதயநிதி நிகழ்ச்சிகளை மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என தலைமையிலிருந்து மாறிமாறி உத்தரவுகள் பறந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம் செலவுகளுக்காக தம்பிடி காசு கூட தலைமையிலிருந்து வராததுதான் கட்சி நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றி மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த மாவட்டச் செயலாளர் மனம் வெதும்பி கூறுகையில், ‘’கிட்டத்தட்ட 40 வருஷ அரசியல் அனுபவம் எனக்கு உண்டு. என் சர்வீசில் இந்த வருடம் அரசியலுக்கு செலவழிச்சது மாதிரி வேறு எப்போதும் செலவழிக்கவில்லை. கொரோனா நிவாரணம் தொடங்கி இப்போதைய விடியலின் குரல் நிகழ்ச்சி வரை இந்த ஆண்டு இதுவரை மட்டும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். மொத்தத்தில் என் கையிலிருந்து மட்டும் 1சி வரை செலவாகியிருக்குது. இது தவிர மற்ற மாவட்ட நிர்வாகிகளும் அவரவர் தகுதிக்கேற்ப செலவழிச்சிருக்காங்க.


 
தேர்தலுக்கு இன்னும் முழுசா ஐந்து மாதமிருக்குது. இன்னும் எத்தனையெத்தனை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியிருக்குதோ! இப்பவெல்லாம் தலைமையிலிருந்து போன் வந்தாலே பயமாயிருக்குது. சரி இவ்வளவு செலவு பண்றோமே...சீட்டாவது கேரண்டியா? என்றால் அதுதான் இல்லை. யார் யார் வெளிமாநிலத்துக் காரங்களுக்கு கோடிகோடியா அள்ளிக் கொடுத்து ஆட்களை தேர்வு செய்றாங்களாம். ஆக மொத்தத்தில் உழைக்க ஒரு கூட்டம்; பிழைக்க இன்னொரு கூட்டம் என்கிற நிலையில்தான் எங்க கட்சி இருக்குது.

மொத்தத்தில் திமுகவை பொறுத்தவரை கட்சி நடத்துவது லேசுபட்ட காரியமல்ல. சமாளிக்கவே முடியவில்லை. சட்டசபை தேர்தலுக்கு பிறகு ரிசல்ட் அப்படி இப்படிண்ணு இருந்தா அரசியலுக்கு முழுக்கு போடுவது அப்படிங்கற எண்ணத்தில்தான் என்னைப் போன்ற பெரும்பாலான நிர்வாகிகள் இருக்கிறாங்க’’என்கிறார்கள்.