a fishing boat in the name of rajini

ரஜினிக்கு பில்டிங் ஸ்ட்ராங்காக இருந்தாலும் பேஸ்மெண்ட் ஆடுவது தெளிவாக புரிகிறது! 

’தன் தேவைக்காக மட்டுமே ரசிகர்களை சந்திப்பார், தன் படம் ரிலீஸாகும் போது மட்டுமே வாய்ஸ் கொடுப்பார்.’ என்று தன்னை நோக்கி பாய்ந்த விமர்சன பந்துகளை ‘ஹ்ஹா!ஆண்டவனும், ரசிகனும் என்னோடு இருப்பதால் அந்த மாதிரி செயல்களுக்கு அவசியமில்லை’ என்று செம்ம அடியடித்து சிக்ஸராக்கினார் ரஜினி. விமர்சனங்களை இப்படி கையாண்ட விதம் அவரது பில்டிங் ஸ்ட்ராங்காக இருப்பதை உணர்த்தியது. 

ஆனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கும் தமிழர்களை விமர்சித்ததன் மூலம் ரஜினியின் பேஸ்மெண்ட் வீக் ஆகி ஆடுவது புரிகிறது.

ரஜினியின் இந்த விமர்சனம் அவரது தைரியத்தை காட்டுவது போல தோன்றினாலும் கூட இது தேவையற்றது மட்டுமல்ல பச்சை சுயநலத்தனமானது! ரஜினி ஒரு கடைந்தெடுத்த காரியவாதி என்பதையும் சொல்லக்கூடியது. 
எப்படி?

முதலில் இதை உளவியல் ரீதியாக அணுகலாம்…சோஸியல் மீடியாக்களில் வெடிக்கும் ரஜினி பற்றிய விமர்சனங்கள் அவரது கவனத்துக்கு போகின்றன என்பதை இந்த விமர்சனம் மூலம் அறிந்து கொண்டனர் எழுதுவோர். ஆக இனி இணையத்தில் விழும் ஒவ்வொரு அடியும் மரண வலி தரக்கூடியதாக அமையும். ‘பாரு, பாரு, பாரு’ என்று சொல்லி சொல்லி அடிப்பார்கள். யாரது வார்த்தைகள் ரஜினியை வெகுவாக நோக, வெறுக்கச் செய்யும் என்பதி ஒரு போட்டியே நிகழும்.

இந்த விஷயம் சாடிஸ புத்தியாளர்களுக்கு கிடைத்த பெரும் தீனி. ஆக ரஜினியே தன்னை வெச்சு செய்வதற்கான லீடை எடுத்துக் கொடுத்துவிட்டார் என்று அர்த்தம். ஆக உளவியல் ரீதியில் ரீதியில் தூண்டிவிட்டிருக்கும் இந்த பிரச்னைக்கான தீர்வு என்னவாக இருந்திருக்க முடியும் என்றால்?...ரஜினி இதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். 

இரண்டாவது, ரஜினி ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி என்பதை அவரது விமர்சனம் காட்டுகிறது. காரணம், தன்னை விமர்சிக்கும் தமிழர்களை கேவலமாக சித்தரித்த ரஜினி, தன்னை நேசித்தவர்களுக்கு இப்படி வெளிப்படையான அங்கீகாரத்தை என்றாவது வழங்கியிருக்கிறாரா? 

ஒரு தொண்டன், ஒரு ரசிகன் தன் தலைமை மீதான விசுவாசத்தை காட்டுவதில் உச்சபட்ச முயற்சி என்ன? என்றால் அந்த தலைவனின் பெயரை தன் பெயரோடு இணைப்பதோ அல்லது தான் தவமிருந்து பெற்ற குழந்தைக்கு சூட்டுவதோதான். அந்த வகையில் தமிழ்நாட்டில் பல்லாயிரம் ரஜினி முருகன்கள், ரஜினி கணேசன்கள், ரஜினி முத்தையாக்கள், ரஜினி பேச்சியப்பன்கள், ரஜினி மன்னாருகள், ரஜினி வெள்ளியங்கிரிகள். அதே போல் ஆயிரக்கணக்கான பாட்ஷாக்கள்,

படையப்பாக்கள், அண்ணாமலைகள், வீராக்கள். தன்னை பெற்று வளர்த்த அப்பன் ஆத்தாவின் பெயரை வைக்காமல், தன்னையே தந்து தன் வாரிசை சுமந்த மனைவியை பெற்றவர்களின் பெயரை வைக்காமல், பரம்பரை பரம்பரையாக தன் குலத்தை காத்துவரும் குலசாமியின் பெயரை வைக்காமல் தனக்கு எந்த வகையிலும் உபயோகப்படாத ஒரு நடிகனின், ரஜினி ஸ்டைலில் பச்சை தமிழனாக சொல்வதென்றால் ஒரு கூத்தாடியின் பெயரை சூட்டுகிறான் என்றால் அந்த ரசிகனுக்கு எவ்வளவு வெறித்தனம் இருக்க வேண்டும். இதை என்றாவது புரிந்து வெளிப்படையாக சொல்லி ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டிருக்கிறாரா ரஜினி?

அட ஒரு ரசிகன் இப்படி கண் மண் தெரியாத தறுதலை விசுவாசத்தோடு இருப்பதை விடுங்கள். ரசிகைகளும் இருந்தது உங்களுக்கு தெரியாதா? பில்லா கமலா, கழுகு சுந்தரி, ரங்கா கீதா…என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு பெண் தன் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ இணைப்பது தன் அப்பா அல்லது கணவனின் பெயராகத்தான் இருக்க முடியும். ஒரு கூத்தாடியின் பெயரை இணைக்கிறார் என்றால் ரஜினி மீதான அவளது ரசிக வெறியின் வீரியத்தை என்று உணர்ந்திருக்கிறார் ரஜினி?

தனக்கு சோறுபோடும் தொழிலை தெய்வமாக மதிப்பவன் தமிழன். அதிலும் மீனவன் போல் தன் தொழிலை மதிப்பவனை உலகத்தில் எங்கும் காணமுடியாது. கடல்மாதா துணை, கடலன்னை துணை , மீன் கன்னியாள் துணை என்று படகில் எழுதி வைப்பதுதான் மீனவனின் வழக்கம். இதை ஒரு சடங்காகவே செய்பவன். இப்படி எழுதவில்லையென்றால் நடுக்கடலில் சாமி குத்தமாகிவிடும் என்று நினைக்கும் இனம் அது. 

அப்பேர்ப்பட்ட மீனவனில் ஒருவன் தன் சாமியை, தன் கடலை, தன் மீனை எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டு ‘பாட்ஷா மாணிக் பாட்ஷா’ என்று தன் படகில் எழுதி வைத்திருக்கிறான் என்றால் ரஜினி அவனது காலில் விழுந்து கும்பிட வேண்டாமா?

தன்னை பற்றி தப்பாக எழுதுகிறார்கள், கேவலமாக விமர்சிக்கிறார்கள் என்று ரஜினி வடிக்கும் முதலைக்கண்ணீருக்கு சிம்பிள் பதிலாக பாண்டிச்சேரி அருகிலுள்ள ஒரு குப்பத்து பீச்சில் கரையேறி நிற்கிறது ஒரு படகு. அதில்தான் இந்த எழுத்துக்கள் இருக்கின்றன. 

தமிழர்களை நோக்கி தான் வைத்த விமர்சனங்களுக்கு பிராயச்சித்தமாக இந்த படகோட்டியை சந்தித்து நன்றி சொல்லட்டும் ரஜினி. உண்மையான நன்றியுணர்விருந்தால் அந்த மீனவன் கடலிறங்கையில் அவனோடு சேர்ந்து ரெண்டடியாவது படகை தள்ளட்டும்!

சுருக்கென்ற அந்த உப்பு நீர் பட்டாவது ஹைபர்னேஷனில் இருக்கும் ரஜினியின் நன்றி உணர்வு விழிக்கிறதா என்று பார்ப்போம்.