எங்க ஃபேமிலி, எங்க அம்மா அப்பா யாரும் என்னை தப்பா நினைக்காதீங்க. பச்சையப்பாஸ் பசங்க கொடுத்த உயிர் பிச்சையால என்னால் உயிர் வாழ முடியாது மச்சான்.. நான் செத்துடுவேன் மச்சா.. என்னை யாரும் தப்பா நினைக்காதீங்க என சக மாணவர்களுக்கு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு கல்லூரி மாணவர்களால் தாக்கி, அடித்து அவமானப் படுத்தப்பட்டதால் மனமுடைந்து முதுகலை முதலாமாண்டு பயிலும் மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. " பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் உயிர் வாழ முடியாது" என அந்த மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி ஹைட்ரோகார்பன் வரை மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் முன்நிற்பது மாணவர்கள் தான். எந்த ஒரு புரட்சிக்கும் முதலில் விதை தூவும் சமூகமாக மாணவர் சமூகமே இருந்து வருகிறது. வரலாற்றில் ஹீரோவாக இருந்து வந்த மாணவர் சமூகம் இப்போது வில்லன்களாக மாறும் நிலைமையை ஆங்காங்கே காணமுடிகிறது. பட்டாக்கத்தி, ரூட்டு தல, அடிதடி என மாணவர்கள் மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கல்லூரிகளான பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்ளும் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இந்நிலையில்தான் மாநிலக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் தன்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் அடித்து, தாக்கி அவமானப்படுத்தியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா குருவராஜப்பேட்டை சேர்ந்தவர் குமார். இவர் மாநிலக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். வழக்கம்போல நேற்று காலை கல்லூரிக்கு சென்று விட்டு பிற்பகல் புறநகர் ரயில் மூலம் வீடு திரும்பியுள்ளார் குமார். அப்போது திருநின்றவூர் அருகே வரும்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் குமார் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் பிடித்து கேலி கிண்டல் செய்து அடித்து அவமானம் செய்ததாக கூறப்படுகிறது. நவீன் மட்டும் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பி சென்றுள்ளான். ஆனால் குமார் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், குமாரை சரமாரியாக அடித்து உதைத்ததுடன் இத்துடன் பிழைத்துப் போ.. உனக்கு உயிர் பிச்சை போடுகிறோம், எனக்கூறி அங்கிருந்து அனுப்பி விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவர் குமார் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர்ப்பிச்சையால் தான் உயிர் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எங்க ஃபேமிலி, எங்க அம்மா அப்பா யாரும் என்னை தப்பா நினைக்காதீங்க. பச்சையப்பாஸ் பசங்க கொடுத்த உயிர் பிச்சையால என்னால் உயிர் வாழ முடியாது மச்சான்.. நான் செத்துடுவேன் மச்சா.. என்னை யாரும் தப்பா நினைக்காதீங்க என சக மாணவர்களுக்கு அவர் அதில் பதிவிட்டுள்ளார். இதே போல வேறொரு ஆடியோவில் ஒரு மாணவர் உங்க பிஜி படிக்கிற மாணவன் ஒருத்தன் மாட்டிக் கொண்டிருக்கிறான் யாராவது வந்து கூட்டிட்டு போங்கன்னு பேசியுள்ள தும் இப்போது வெளியாகி உள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் பிரேதத்தை மீட்டு திருவள்ளூர் அரசு கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனால் மாநில கல்லூரி மாணவர்கள் ஒன்றுதிரண்டு குற்றவாளிகளை கைது செய்யும் வரையில் உடலை வாங்கப் போவதில்லை என திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முற்றுகையிட்டுள்ளனர். மாணவர்கள் அதிகம் திரண்டு வருவதால் பாதுகாப்பு காரணம் கருதி அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு சென்று படித்து பட்டம் வாங்கி தங்கள் பிள்ளைகள் தங்களை கடைசி காலத்தில் காப்பாற்றுவார்கள் என்று ஏங்கி நிற்கும் பெற்றோர்கள் கனவில் மண்ணை வாரிப் போடும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை, போலீசாரும் அரசும் அடையாளம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
