’பிளாக் நம்பர் ஒன்பது’ - தி.மு.க.வின் பெரும் நம்பிக்கை மூச்சாக உலவிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தன் வாழ்நாளில் மறக்கவே முடியாத வார்த்தை இது. ஏன்?

லட்சோபல லட்சம் தொண்டர்களை கொண்ட திராவிட முன்னேற்ற கழகம் எனும் மாபெரும் இயக்கத்தின் கழுத்தில் ஜொலிக்க ஜொலிக்க சூட்டப்பட்டிருக்கும் ‘செயல்தலைவர்” எனும் ஆபரணம் 42 ஆண்டுகளுக்கு முன் அனலில் முக்கியெடுத்து, சுத்தியாலும், லத்தியாலும் அடித்து அடித்துப் புடம் போடப்பட்டது.

இதே பிளாக் நம்பர் 9_ல்தான். ஆம் ‘எமர்ஜென்ஸி” எனும் அவசரச்சட்டத்தில்  ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையின் ஒன்பதாவது நம்பர் பிளாக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார். சிம்பிளாக சொல்வதென்றால் அது சிறை அறையல்ல ‘நரகத்தின் உச்சம்”.

தொழு நோய்,  பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்படும் கொட்டடி அது. அங்கேதான் அரசியல் கைதிகளான ஸ்டாலின், சிட்டிபாபு, ஆற்காட்டார் உள்ளிட்டோரை அடைத்து மரியாதை செய்தது மத்திய சர்க்காரான காங்கிரஸ். 

தமிழக முதல்வரின் புத்திரனாக முந்தைய நாள் வரை வலம் வந்து அரசியல் வளர்த்த ஸ்டாலின், ஆட்சி கலைக்கப்பட்டு மிசாவில் கைதான பிறகு சிறையில் அனுபவித்த கொடுமைகளை இன்று படமாக போட்டுக் காட்டினால் தமிழகம் கண்ணீரில் மூழ்கிவிடும். விளக்கத்திற்கு அப்பாற்ப்பட்ட சித்ரவதைகள் அவை.

அப்படி உருவேறி உருவேறி ஒவ்வொரு படியாக கடந்து இன்று கழக மூலவரான கலைஞரின் அருகில் உற்சவராக வந்தமர்ந்திருக்கிறார். 

உற்று கவனித்தால் ஸ்டாலினிடம் உயரிய அரசியல் தலைமைப் பண்புகள் விளங்கும். வடக்கே இருக்கும் அரசியல் நாகரிகம் தெற்கே இல்லை அதிலும் தமிழகத்தில் ஆக சுத்தம் என்று ஒரு விமர்சனம் உண்டு.

தி.மு.க.வினரும் - அ.தி.மு.க.வினரும் எந்த நிகழ்விலும் ஒன்றாய் கலக்க கூடாது, சட்டமன்றத்தில் எதிரெதிராய் பார்த்தாலும் கூட மூஞ்சை திருப்பிக் கொள்ள வேண்டும், இரண்டும் எதிரெதிர் கட்சிகளல்ல... எதிரிக்கட்சிகள்தான் என்று கடந்த சில ஆண்டுகளாய் தமிழக அரசியலுக்கு ஒரு செயல்வடிவம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அதை மிக அழகாக சில ஆண்டுகளுக்கு முன்பே உடைத்தவர் ஸ்டாலின்தான். சென்சிடீவான சமயத்தில் கூட முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கழகம் சார்பாக நிவாரண நிதி கொடுத்ததாகட்டும், ஜெ., பதவியேற்கும் விழாவில் எந்த முன்னுரிமையும் வழங்கப்படாத வரிசையில் அமர்ந்ததாகட்டும், ஜெ., சுகவீனப்பட்டு கிடந்த நிலையில் அப்பல்லோ சென்று நலம் விசாரித்ததாக இருக்கட்டும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ராஜாஜி ஹாலுக்கு எந்த பாதுகாப்பு பந்தாவுமில்லாமல் வந்து சென்றதாகட்டும்!...பகையே முதலீடான தமிழக அரசியலில் தானொரு பக்குவமான மனிதன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் தலைவர் அவர். 

பிரச்சார அணுகுமுறை, கழக இளைஞரணிக்கு இவர் அமைத்துள்ள செயல்வடிவம், அரசியல் தாண்டி வெகுஜனங்களில் ஒருவனாய் தன்னை காட்டிக் கொள்ளும் பாங்கு என்று எல்லாமே ஈர்க்கிறது ஸ்டாலினிடம். ஜெ., மரணித்துவிட்டதாக அதிகாரபூர்வமாய் அறிவிக்கப்பட்ட நொடி துவங்கி இந்த நொடி வரை அ.தி.மு.க. குழம்பிய குளமாகதான் கிடக்கிறது.

ஸ்டாலின் கொஞ்சம் முயன்றிருந்தாலும் ‘ஆட்சி” எனும் மீனை பிடித்திருக்கலாம். ஆனால் அவர் அதற்கு ஆசைப்படாமல் ‘மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வரவே தி.மு.க. விரும்புகிறது.’ என்று சொல்லியிருப்பது ஜனநாயகத்தின் வேர் மீது அவர் மலர் தூவுவதை காட்டுகிறது.

இதெல்லாம் சரிதான், நிறைதான்! ஆனாலும் செயல்தலைவரின் பாய்ச்சலில் இன்னமும் எனர்ஜி தேவை என்று ஏங்குகிறார்கள் அவரது கட்சியினர். அதை ஸ்டாலின் புரிந்து கொண்டு இயங்கினால் கட்சி ஆர்ப்பரிக்கும். அசையாது கிடந்தாலும் கூட, மிக சரியான நொடியில் பாய்ந்து ஆளையே விழுங்கும் மலைப்பாம்புகளின் ஆளுமை வனத்தில் பெரிதுதான்.

ஆனாலும் சில நேரங்களில் பட்டாம் பூச்சிகளாய் படபடத்தால்தான் சூழல் சுகந்தமாயிருக்கும். உள்ளாட்சி, நாடாளுமன்றம் ஆகிய தேர்தலுக்கு ஸ்டாலின் பக்குவமாய் தயாராகி நிற்பது புரிகிறது. இருந்தாலும் பொதுத்தேர்தலே இடையில் வந்து விழுந்தாலும் அதை வளைத்து சுருட்டிட அவர் இப்போதே முஸ்டி முறுக்கினால்தான் சோர்ந்து கிடக்கும் கழக காளைகள் கொம்பு சீவிக் கொள்வார்கள்.

நிலவொளியில் கடற்கரை மணலில் ஆழ்ந்த ஆலோசனைகள் மட்டுமே போதுமா தளபதி! எழுந்து அலையோடும் விளையாடுங்கள்...அதுதானே அரசியல் கடலுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை!