இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரிடம் டிடிவி தினகரன் 1.30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சுகேஷ் சந்திரசேகர்  பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர்  என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்திரசேகரிடம் பேசவில்லை எனவும், யாரிடமும் பணம் கொடுக்கவிலலை எனவும் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடலை கைப்பற்றி உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்  என்று பார்ப்போம்.

வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான நடிகை லீனா மரியாபாலின் காதலன் தான் இந்த சுகேஷ் சந்திரசேகர். பெங்களூரை சேர்ந்த இவர், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி பல குரலில் பேசி மோசடி செய்துள்ளார்.

மெட்ராஸ் கஃபே ஹீரோயின் லீனா மரியாபாலுடன் நெருங்கி பழகிய சுகேஷ் சந்திரசேகர் , அவரை தனது காதல் வலையில் வீழ்த்தினார்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட லீனா, சுகேஷ் சந்திரசேகரின்  மோசடிகளுக்கு உடந்தையாக இருக்க ஆரம்பித்துள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி மற்றும் சேலையூரில் உள்ள வங்கிகளில் போலி ஆவணம் மூலம் ரூ.19.22 கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

டெல்லி அருகே பங்களாவில் பதுங்கியிருந்த லீனாவை கடந்த 2013 ஆம் ஆண்டு மே 27ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

ஆனால் அவரது காதலன் சுகேஷ் சந்திரசேகர்  தப்பி ஓடிவிட்டார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பதுங்கிருந்த அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர், திகார் சிறையில் சுகேஷ் சந்திரசேகரை  அடைத்தனர்.

இந்த தகவல் உடனடியாக சென்னை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டெல்லி சென்று சுகேஷ் சந்திரசேகரை சென்னை அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் கர்நாடகாவில் ஆணுறை காண்ட் ராக்ட் வாங்கித்தருவதாக ரூ.65 லட்சம் மோசடி , அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பேரன் என மோசடி செய்தது , சொகுசு கார் மோசடி என சுகேஷ் சந்திரசேகர்  மேல் பல குற்றசாட்டுகள் உண்டு.

தற்போது இரட்டை இலை பெற்று தருவதாக கூறி சிக்கி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.