A case has been filed against the DVV supporter Vijayawale for the release of the video on J.Chikhe in Newwannarpet police station.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று ஜெ.சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்டதற்காக டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் மீது புதுவண்ணார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர், 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சைப்பலனின்றி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 

இதனிடையே ஜெயலலிதாவை பார்க்க அவரது தோழி சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் மட்டுமே வெளியானது. 

இதற்கு அப்போது அமைச்சர்களும் விசுவாசிகளும் கூட சப்பை கட்டு கட்டி வந்தனர். இதையடுத்து பன்னீர் தரப்புடன் எடப்பாடி அமைச்சரவை கூட்டு சேர்ந்ததும் டிடிவியையும் அவரது குடும்பத்தையும் கட்சியை விட்டு விலக்கினர். 

இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தரப்பு தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் போராடி வருகிறது. இந்நிலையில், நேற்றுடன் பிரச்சார நேரம் முடிவடைந்த நிலையில், ஜெ சிகிச்சை பெற்று வந்த வீடியோ ஒன்றை டிடிவி தரப்பு வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். 

மேலும் ஜெ மேல் சிகிச்சை குறித்து அமைச்சர்கள் ஆலோசித்த வீடியோகூட எங்களிடம் உண்டு என்றும் தேவைப்பட்டால் வெளியிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார். 

ஆர்.கே.நகர் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று ஜெ சிகிச்சை வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ஆர்.கே.நகரில் பரப்புரை காலம் முடிவடைந்த நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

அதன்படி வெற்றிவேல் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் புதுவண்ணார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.