"வேலூரில் என்னை வெற்றி பெற செய்யா இல்லாவிட்டால் இந்த மாவட்டத்தில், அதிமுகவே இல்லாமல் போய் விடும் என்று அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்..
வேலுார் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக கூட்டணி சார்பில் புதி நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகமும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. வேலூரில் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்ட ஏ.சி.சண்முகம் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏ.சி. சண்முகம் பேசியது ஹைலைட்டானது.
தேர்தல் செலவுக்காக கூட்டணி கட்சிகள் அதிகப் பணத்தை கறக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் விதமாக ஏ.சி. சண்முகம் பேசினார். “என்னைப் பொறுத்தவரை நான் ஒரு பொன் முட்டையிடுற வாத்து. தினமும் ஒரு முட்டை கொடுத்துவிடுவேன். ரொம்ப ஆசைப்பட்டு, வாத்தை வெட்டினால் என்ன ஆகும்? செத்துபோய்விடும். அப்புறம் உங்களுக்கு பொன் முட்டை கிடைக்காமல் போய்டும்.  நான் நினைச்சிருந்தா மா நிலங்களவை எம்.பி.யாகி இருப்பேன். எனக்கு பதவி தரேன்னு தேவகவுடா கூப்பிட்டாரு. ஆனா, நான் மறுத்துட்டேன்.

 
ஏன்னா, வேலுார் மீதுதான் எனக்கு ஆசை. இங்கிருந்து எம்.பி.யாகி மக்களுக்குசேவை செய்யணும்னு விரும்புறேன். வேலூர்ல மூன்றாவது முறையா போட்டிபோடுகிறேன். நீங்க எல்லோரும் கோஷ்டி பூசலை மறந்து, கடுமையாக உழைத்து என்னை ஜெயிக்க வைக்கணும். அப்படி இல்லாவிட்டால் இந்த மாவட்டத்துல அதிமுகவே இல்லாமல் போய்டும்.” என்று இறுதியில் செண்டிமெண்ட்டாகப் பேசினார் ஏ.சி.சண்முகம்.