சுற்றுக் சூழல் துறையிடமிருந்து முறையான அனுமதி பெறாத காரணத்தால் எட்டு வழிச்சாலைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு  பல விவசாய சங்கங்கள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து வழக்குகள் தான் காரணம் என்றாலும், அந்த வழக்குகளுடன் பாமகவின் வழக்கும் இருந்ததால், இந்த வெற்றிக்கு அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக உரிமை கொண்டாடியது.

அதே நேரத்தில் சேலத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 8 வழிச்சாலையை கொண்டு வருவோம் என தெரிவித்தார். ஆனால் அதிமுக அரசு இந்த விஷயத்தில் மேல் முறையீடு செய்யாமல் தன்னுடைய கூட்டணி உறவால் தடுத்து நிறுத்துவோம் என  பாமக கூறி வருகிறது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மேல் முறையீடு செய்ய மாட்டோம் என அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த உறுதிமொழியை விவசாயிகளும், பாமகவும் நம்பி இருந்த நிலையில் கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து  ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது அதிகாரிகள் மே 19 ஆம் தேதியன்று 4 தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் தேர்தல் முடிந்ததும் 8 வழிச்சாலை பணிகளைத் தொடங்க வேண்டும் என கறாராக சொல்லியிருக்கிறார்.