யாருடைய மனதையும் புண்படுத்தி 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், யாருக்கும் நெருக்கடி தந்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த மாட்டோம். தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு அல்ல. 8 வழிச்சாலையை நிறைவேற்ற வேண்டும் என சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் எதிர்க்கின்றனர்.

 

8 வழிச்சாலைக்காக நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறு பலர் மனு அளித்துள்ளனர். யாரையும் கட்டாயப்படுத்தி நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்ற நிலை அரசுக்கு கிடையாது. நவீன முறைப்படி அதிவிரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. யாருக்கும் நஷ்டம் ஏற்படாமல் சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் கூறியுள்ளோம்.  

மேலும், அவர் பேசுகையில், உண்மையான அதிமுக தொண்டர்களை தொட்டுப் பார்க்க முடியாது. அதிமுக தொண்டர்களை திமுகவுக்கு இழுக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றவர்கள் சாரை சாரையாக தாய் கழகத்தில் வந்து இணைந்து கொண்டிருக்கின்றனர். மேட்டூர் அணைக்கு போதிய காவிரி நீர் வந்தவுடன் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சொட்டு நீராக இருந்தாலும் அதை முறைப்படி பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என முதல்வர் பழனிச்சாமி கூறினார்.