அனைவரும் நினைப்பதைப் போல் 8 வழிச்சாலை திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமே ஒழிய மாநில அரசின் திட்டம் அல்ல என்றும் இந்த சாலை அமைப்பதற்கு தமிழக அரசு உதவி மட்டுமே செய்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை முதல் சேலம் வரை 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாரத் மாலா திட்டத்தின் கீழ் 8 வழிச்சாலை சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் இந்த சாலை அமைப்பதற்கு பொது மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனை எதிர்த்து கடுமையாக குரல் கொடுப்பவர்களை தமிழக அரசு அரெஸ்ட் பண்ணி வருகிறது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  பசுமை வழிச்சாலை என்பது பாராத் மாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ள  திட்டம். இது முழுக்க, முழுக்க மோடி அரசின் திட்டம் தான் என கூறினார்.

இதற்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாலை அமைப்பதற்கு தமிழக அரசு உதவி மட்டுமே செய்கிறது என்றும் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி,  பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை போன்றவற்றை கணக்கில் கொண்டு பார்த்தால் 8 வழிச்சாலை அவசியமான ஒன்று  என்று ம் அவர் கூறினார்.

விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மார்க்கெட் விலையைவிட அதிக அளவு இழப்பீடு வழங்கப்படும் என்றும் எடப்பாடி தெரிவித்தார். இந்த சாலை மூலம் சேலம் மட்டுமல்ல அதைத்தாண்டி கேரளா செல்பவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

தமிழக அரசு மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளவர்கள் இந்த திட்டத்துக்கு எதிராக மக்களை தைசை திருப்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.