தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடைபெற்றது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. வாக்காளர்களுக்கு சானிடைசர், முகக்கவசம் மற்றும் கையுறைகள் ஆகியவையும் வழங்கப்பட்டன. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையின் நின்று வாக்கு செலுத்த தொடங்கினர். 

சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக வாக்காளர்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஒரு சில இடங்களில் மட்டுமே சலசலப்புகள் ஏற்பட்டன. மேலும் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரும் ஆர்வமுடன் வாக்குகளைப் பதிவுசெய்தனர். 

கொரோனா காரணமாக வாக்களிக்க இரவு 7 மணி வரை வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா நோயாளிகள் கடைசியாக வந்து வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளா திமுக எம்பி கனிமொழி, அதிமுக அவை தலைவர் மதுசூதனன் ஆகியோர் பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தனர். தேர்தல் சரியாக 7 மணிக்கு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் தொடங்கின. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், 234 தொகுதிகளில் 72.78% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாவட்டங்களில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92% குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.