கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் 7 மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளார். வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் நோய் கண்டறியும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் முன்பை விட சற்று குறைந்துள்ள போதும் அது இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. தற்போது தினசரி சுமார் 50,000 பேர் அதில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அதில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது கொரோனா நோய் தொற்றுகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  86,83, 917 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 47,905 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சுமார் 550 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.28,121 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவிலிருந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 52,718 பேர் குணமடைந்துள்ளனர். இருந்தாலும் முழுவதுமாக இந்த வைரஸில் இருந்து மீண்டுவர பிரத்தியேக தடுப்பூசியை எதிர் நோக்கி உலக நாடுகள் காத்திருக்கின்றன. அதற்கான முயற்சியில் இந்தியாவும் தீவிரமாகஈடுபட்டுவருகிறது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் கவனம் செலுத்துமாறு 7 மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உரையாற்றினார். அப்போது மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். கொரோனாவை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வைரஸ் தொற்றிலிருந்து இறப்புகளை குறைக்க கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 24, அல்லது 48 அல்லது 72 மணி நேரத்திற்குள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். வைரஸ் தாக்கம் அதிக உள்ள மாநிலங்களிலும் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார். 

குறிப்பாக வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நகரங்களில் அதிக மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார துறை அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தினார். அதேநேரத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார், அப்போது உலகளவில் covid-19 எதிராக ஒன்றிணைந்து போராட  பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும், உலக சுகாதார அமைப்பின் செயல்பாட்டை பாராட்டியதாகவும் பிதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்க்கு மத்தியில் மற்ற நோய்களில் கவனக்குறைவாக இருக்க கூடாது எனவும், உலக சுகாதார அமைப்பின் தலைவரிடமும் மோடி வலியுறுத்தியுள்ளார். 

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் முக்கிய முடிவை அறிவித்துள்ளார். அதாவது அடுத்த ஆண்டில் 2021 ஆம் ஆண்டு 10  மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள் என அறிவித்துள்ளார். இதற்கான உத்தரவை மாநில கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.