பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 வருடங்களாக சிறையில் இருக்கும் 7 
தமிழர்களுக்கு கிட்டத்தட்ட விடிவு காலம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபட் பயாஸ், ரவிசந்திரன், ஜெய்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக 27 வருடங்களாக சிறையில் இருந்து வருகின்றனர். 

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் இந்த 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகாலமாகவே 
தொடர்ந்து பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர்.2016 ஆம் ஆண்டுக்கு முன்பே ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் இவர்களை விடுவிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்களை விடுவிக்க முடியாத சூழல்கள் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் 7 பேரையும் விடுதலை செய்ய, தமிழக அரசு மத்திய அரசின் அனுமதியை கோரி இருந்தது. 

சட்ட அமைச்சர் சிவிசண்முகம் தலைமையில், எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையை பெற்று இந்த முயற்சியை தீவிரமாக 
மேற்கொண்டிருந்தனர். ஆனால், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் 7 பேரையும் விடுதலை 
செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது அரசியல் சாசனம் 161 பிரிவின்கீழ் தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான ஒரு முடிவை கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என ஒரு பாசிடிவ் ஆன தீர்ப்பை வழங்கியது.எனவே, தமிழக அரசோ, மத்திய அரசோ நேரடியாக இந்த 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழக அரசு கவர்னருக்கு பரிசீலிக்கும்பட்சத்தில், கவர்னர் மனது வைத்து விடுதலை செய்வதற்கான பரிந்துரையை குடியரசு தலைவருக்கு செய்ய வேண்டும். 

 இந்த நிகழ்வு சரியாக நடக்கும் பட்சத்தில் உடனடியாக இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசால் முடியும். இது குறித்து பேட்டி 
அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து பாசிடிவ் முடிவு எடுக்கப்படுமென 
தெரிவித்துள்ளார். இதனால், கிட்டத்தட்ட 7 பேரும் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது. அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இந்த பேச்சு 
அற்புதம்மாள் போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.