7.5% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை உத்தரவை பாராட்டியிருக்கிறார். அதே நேரத்தில் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி உடனடியாக மருத்துவ கலந்தாய்வை தொடங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். 

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்... 'திமுகவின் தொடர் போராட்டம் காரணமாக, 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே  நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சலிங் தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதிமுக அரசு - தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜவுடன் கூட்டணியாக உள்ள நெருக்கத்தைப்  பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலைப்  பெறுவதற்குப் பதில் இப்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது.  இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இந்த உத்தரவை 45 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம். இந்த அரசாணை சரியா? தவறா? அரசுக்கு அதிகாரம்  இருக்கிறதா?  இல்லையா? என்றெல்லாம் பொது விவாதம் இப்போது தொடங்கி விட்டது. இதற்கிடையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா? அல்லது   ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை.

இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவை ஒருபுறமிருக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக  மருத்துவக் கவுன்சலிங் தேதிகளை அறிவித்து - மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும், அரசாணை வழியாக வழங்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீட்டிற்கு, எவ்வித இடையூறும் நேர்ந்து விடாமல் தடுக்க  வேண்டிய மிக முக்கியக் கடமையை அ.தி.மு.க. அரசு கண்ணும் கருத்துமாக  மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.