7.5% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில், அவசரநிலை கருதி தமிழக அரசு தனக்கான நிர்வாக அதிகாரத்தின்கீழ் கொள்கை முடிவெடுத்து இந்த அரசாணையை வெளியிட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக அரசாணை செல்லுமா, செல்லாதா என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். 

இந்நிலையில், 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது ஒப்புதல்வழங்கியுள்ளார். இது காலதாமதமான முடிவு என்றாலும் இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர். 

இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

திமுக நடத்திய போராட்டமும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநருக்கு உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூக நீதி! எப்போதும் வெல்லும் சமூக நீதி!!" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.