நமது மாநிலத்தில் இருந்து 4,24,394 இடம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (29.8.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக அவர் உரையாற்றினார், அப்போது அவர் பேசியதாவது:- நமது மாநிலத்தில் இருந்து 4,24,394 இடம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும், 80,779 வெளிநாட்டு வாழ் தமிழர்களை வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் மூலம் பத்திரமாக தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். தமிழ்நாடு அரசு, தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும்
கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிபடுத்தியுள்ளது. 

பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத்திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும். கோவிட்  RTPCR பரிசோதனையின் போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவித்தல் வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கோவிட் சிறப்பு மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
அம்மையங்கள் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க, உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தை கொண்டு இருந்த போதிலும், இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்கதக்க முகக் கவசங்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 46 இலட்சம் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்களை சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில், இதுவரை 72.56 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வேளாண் தொழிலுக்கு மட்டும் விலக்களித்து, முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்து, அவர்களை பாதுகாக்க தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு அம்மாவின் அரசு, மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்தியது. 

பின்னர், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 31,464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன. இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.