2021 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் ஓராண்டுக்கு முன்பாகவே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் சித்து விளையாட்டுகள் அரங்கேற தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பெரும் செல்வாக்கு இல்லாமல் இருந்த காலம் உண்டு. ஆனால் தற்போது அப்படியல்ல; பாஜகவை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாத எனுமளவிற்கு, தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. 

திமுகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் விபி துரைசாமி திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அடுத்தது திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம். மேலும் ஒரு வடமாவட்ட திமுக எம்பி-யும் அடுத்ததாக பாஜகவில் இணையப்போவதாக பேசப்படுகிறது. 

இப்படியாக திமுகவில் இருந்து பலரும் கூடாரத்தை காலிசெய்து பாஜகவில் இணைந்துவரும் நிலையில், திமுக உறுப்பினர்களும் தொண்டர்களுமே கூட பாஜகவில் கூட்டம் கூட்டமாக இணைந்துவருகின்றனர். அந்தவகையில், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காததால் அதிருப்தியடைந்து ஈரோடு மாவட்டம் வடுகப்பட்டி பேரூராட்சியில் ஒரு வார்டு முழுவதுமாக திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யூனியன், வடுகப்பட்டி பேரூராட்சியில் 5வது வார்டு ஜெ.ஜெ.நகரில் பாஜக சார்பில் முருகரின் வேல்பூஜனி நடந்தது. அதன்பின்னர் அப்பகுதி திமுக கிளை செயலாளராக இருந்த தேவராஜ் தலைமையில் திமுக உறுப்பினர்களாக இருந்த 68 குடும்பங்களை சேர்ந்த 152 பேர் பாஜகவில் இணைந்தனர். பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலையில் இவர்கள் அனைவரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது, இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளதாகவும், அதனால் திமுகவில் தொடர வேண்டாம் என்று முடிவெடுத்து பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளனர். 

10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத திமுக, எப்படியாவது 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில், திமுகவிலிருந்து கூட்டம் கூட்டமாக உறுப்பினர்கள் பாஜகவில் ஐக்கியமாவது, திமுக தலைவர் ஸ்டாலினை கலக்கமடைய செய்துள்ளது.