Asianet News TamilAsianet News Tamil

டெல்டா மாவட்ட விவசாயிகள் நலனுக்காக ரூ.61.09 கோடியில் சூப்பர் திட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

நடப்பாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், ரூ.61.09 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் காரணமாகவும், குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும்.

61.09 crore paddy cultivation package scheme for the benefit of delta farmers... CM Stalin Announcement
Author
Tamil Nadu, First Published Jun 17, 2021, 1:48 PM IST

டெல்டா மாவட்ட விவசாயிகள் நலனுக்கு ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- முதல்வர் மு.க.ஸ்டாலின் 12.06.2021 அன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயர்மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில், ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து ஆணையிட்டுள்ளார்.

61.09 crore paddy cultivation package scheme for the benefit of delta farmers... CM Stalin Announcement

இந்த குறுவை சாகுபடி உதவி தொகுப்பு திட்டமானது, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில், முதல்வரின் உத்தரவின்படி, சிறப்புக் கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்து, பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து, டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடி மதிப்பீட்டில் 4,061.44 கி.மீ. தூரத்திற்கு 647 தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

11.06.2021 அன்று, திருச்சி கல்லணையில் ரூ.1,036 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து, பின்னர், 12.06.2021 அன்று குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைத்தார். கல்லணையிலிருந்து 16.06.2021 அன்று காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

61.09 crore paddy cultivation package scheme for the benefit of delta farmers... CM Stalin Announcement

மேட்டூர் அணையில் 16.06.2021 அன்றைய நிலவரப்படி, 94.26 அடி (57.656 டிஎம்சி) நீர் இருப்பில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தொடர்ந்து காவிரியில் மாதந்தோறும் உரிய அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், எதிர்வரும் 22.06.2021 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்புக் குறுவைப் பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களைப் போதிய அளவு இருப்பில் வைத்திடவும், நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு, விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ளவும் வேளாண்மைத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு மேற்கொண்டுவரும் இத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக, 14.06.2021 வரை, 1,69,300 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, நெல் நாற்றங்கால் விடும் பணியும் நடவுப் பணியும் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக, 2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், 1,90,000 ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், 24,000 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும்.

இதற்காக, அரசு ரூ.50 கோடி நிதியினையும், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கவும், நீரைத் திறம்படச் சேமித்து பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தும் வகையில், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், ரூ.11.09 கோடி நிதியினையும் வழங்கி, ஆக மொத்தம் ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தைத் தமிழக முதல்வர் அறிவித்து ஆணையிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவர்.

61.09 crore paddy cultivation package scheme for the benefit of delta farmers... CM Stalin Announcement

எனவே, நடப்பாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், ரூ.61.09 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் காரணமாகவும், குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios