தமிழகத்தில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 60 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 21-ம்  தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் 8 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். திமுக வேட்பாளர் புகழேந்தி கூடுதலாக 4 மனுக்களை வேட்புமனு தாக்கல் செய்ததால், மொத்த எண்ணிக்கை 28 ஆனது.
இதேபோல நாங்குநேரி தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 28 பேர் 34 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதன்மூலம் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்கள் 46 மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். எண்ணிக்கை அளவில் விக்கிரவாண்டி தொகுதியில் 23 பேரும் நாங்குநேரியில் 37 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற 3-ம் தேதி மாலை வரை அவகாசம் உள்ளது. இதன் பிறகே இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தெரியவரும்.