தொடர்ந்து 6 மாதம் ஓய்வூதியப் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோலவே, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு, பொருளாதார நலன் கருதி அரசால் ஓய்வுதியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் 6 மாதங்களாக பணப் பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாவிட்டால் அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கி, ஓய்வூதியம் செலுத்தும் அதிகாரி அல்லது கருவூல அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு ஓய்வூதியத் தொகையை எடுக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தி வைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் இறப்புக்குப் பிறகும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்துவதைத் தவிர்க்கவே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.