பெருநகர சென்னை மாநகராட்சியில் 6.75 லட்சம் எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.  தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் பேசியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 12,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

சென்னை மாநகரத்தில் 10 லட்சம் மக்களுக்கு 21,000 பரிசோதனையும், தமிழ்நாட்டில் 7000 பரிசோதனையும், இந்திய அளவில் 400 பரிசோதனையும் செய்யப்படுகின்றன. 30 கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மாதிரிகள் சேகரிப்பு மையங்கள், 10 நடமாடும் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை 6.75 லட்சம் எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே  எந்த மாநகராட்சிகளிலும் இந்த அளவு எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி  117.00 லட்சம் முகக் கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தற்போது 107.10 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.  6.17 இலட்சம் கையுறைகள் கொள்முதல் செய்யப்பட்டு 1.84 லட்சம் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட் தொற்று உடைய மற்ற வியாதிகள்  இல்லாத 60 வயதுக்குட்பட்டோர் கோவிட் சோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இவர்களின் இருப்பிடத்தை களப்பணியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனுடன் வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. 

மருத்துவமனையில் அனுமதி தேவைப்படுபவர்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த தொடர் கண்காணிப்பு வீட்டில் தனிமையில் உள்ள 14 நாட்களுக்கு நடைபெறும். இதுவரை 1,958 பேர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 10.42 லட்சம் கட்டிடங்கள் உள்ளன, இவற்றில் 19.80 லட்சம் குடும்பங்கள் உள்ளன, வீடு வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு செய்யும்  12,000 களப் பணியாளர்களும் நாளொன்றுக்கு 100 முதல் 150 வீடுகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

களப்பணியாளர்களால் 10.88 லட்சம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில், சென்னை மாநகரில் 1,51,142 நபர்களுக்கு காய்ச்சல் இருமல் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு 1,45,889 நபர்கள் குணமடைந்துள்ளனர். மீதம் உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.