5th Dec 2016 Amma died 5th Dec 2017 Democracy died

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார்; 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியான இன்று ஜனநாயகம் இறந்தது என்று நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனு இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு நேற்று பிற்பகல் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்ய முன்மொழிந்த பத்து பேரில், இருவரது கையெழுத்துகள் போலியானவை என்றும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளை விஷால் மறைத்துள்ளார் என்றும் கூறப்பட்டது. என்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என்றார் விஷால். விஷாலை முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார்.

வேட்புமனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களை மிரட்டி, எனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ளனர் என்று அவர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தார். பின்னர், இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அது வரை என் மனு மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் விஷால் கூறினார். இதனிடையே, விஷால் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார். 

தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார், விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து, ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை அளித்தார். இதன் அடிப்படையில், அவரது வேட்பு மனு ஏற்கப்படுவதாக தேர்தல் அலுவலர் வேலுசாமி அறிவித்தார். 

நியாயம், நீதி, நேர்மை வென்றது என்று நடிகர் விஷால் பேட்டி அளித்தார். தேர்தலை நேர்மையாக சந்திப்பேன் என்று கூறிய அவர், வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்தே போராட்டத்தை மட்டுமே சந்தித்தேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், விஷாலை முன்மொழிந்த இருவரும் நேரில் ஆஜராகி, தாங்கள் அவரை முன்மொழியவில்லை என்று கூறினர். இதனை அடுத்து, விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் ஏற்கப்பட்டு வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டத்தை அடுத்து அவர் டிவிட்டர் பகத்தில் டிவிட் செய்துள்ளார் அதில், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார். இன்று அதாவது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜனநாயகம் இறந்தது என்று பதிவிட்டிருந்தார்.