பண்டித ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்தே டிடி. கிருஷ்ணமாச்சாரி, மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பல வேட்டிக்கட்டிய தென்னிந்திய தலைவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். 

நேருவை தொடர்ந்து வந்த மற்ற பிரதமர்கள் காங்கிரஸ் கட்சியின் இந்திரகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் அமைச்சரவையிலும் ஏராளமான வேட்டிக்கட்டிய தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முரசொலி மாறன், ப.சிதம்பரம், நாராயணசாமி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, செஞ்சி ராமசந்திரன், ஏ.கே.ஆண்டனி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு தற்போது துணை குடியரசுத்தலைவர் இப்படி அடுக்கடுக்கான வேட்டி கட்டிய தலைவர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

 

தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பாஜக சார்பில் ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த மாநிலங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மோடியே முன்வந்து கட்சிக்காக உழைத்த சீனியர் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கலாம் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. 

திருச்சியை பூர்விகமாக கொண்ட ஜெய்சங்கர் ஐஎப்எஸ், மதுரையில் பிறந்து திருச்சியில் படித்து டெல்லியில் குடியேறிய நிர்மலா சீத்தாராமனும் கேபினட் அமைச்சர்களாக தமிழர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்கள் இருவரையும் தமிழர்களின் முகமாக மோடி பிரதிபலித்திருப்பது தமிழக மக்கள் மட்டுமல்ல தமிழக பாஜகவினரே விரும்பவில்லை என்பதுதான் உண்மை. 

காரணம் நிர்மலா சீதாராமனோ, ஜெய்சங்கரோ தமிழக மீனவர் பிரச்சனைக்கோ அல்லது மற்ற வாழ்வாதார பிரச்சனைகளுக்கோ நேரில் போராடியவர்கள் அல்ல. மாறாக தமிழிசை போன்ற பாஜகவில் ஆரம்ப காலத்தில் இருந்த வந்த இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வெயில் மழை குளிர் பாராது களத்தில் இறங்கி வேலை செய்தவர்கள் அவர்களுக்காவது ஒருவாய்ப்பை கொடுத்திருக்கலாம்.

 

எல்லாவற்றிற்கும் மேலாக பல அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் தனது கொள்கையில் உறுதியாக நின்று கார்த்திக் சிதம்பரத்திடம் போராடி தோற்ற மோடியின் உண்மை விசுவாசியான ஹெச்.ராஜாவுக்காவது ஒரு அங்கீகாரத்தை கொடுத்திருக்கலாம் என்பதும் தமிழக பாஜகவின் ஆதங்கமாக உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் சார்பிலும் அதற்கு முன்பு ஓ.ராஜகோபால் கேரளத்தின் சார்பிலும் அமைச்சர்களாக இருந்தனர். தற்போது அதற்குகூட வழியில்லாமல் போனது.   

மொத்தில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்புக்கு பிறகு எடுக்கப்பட்ட குரூப் புகைப்படத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தவிர வேட்டிக்கட்டிய ஒரு நபர் கூட இல்லை என்பது தெள்ளத்தெளிவான அதிர்ச்சிகரமான உண்மையாகும். தற்போது மோடியுடன் 58 பேர் பதவியேற்றுள்ள நிலையில், வேட்டிகட்டிய தமிழர் ஒருவருக்காவது அமைச்சரவையின் விரிவாக்கத்தின் போது மோடி வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.