2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் மூத்த பெண் அதிகாரிகளின் பங்களிப்பு 41 சதவீதமும், ஒட்டுமொத்த பட்ஜெட் தயாரிப்பில் பங்களிப்பு பெண் அதிகாரிகளின் பங்கு 52 சதவீதமும் ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கான தயாரிப்பு பணிகளில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பெண் அதிகாரிகளின் பங்களிப்பு வழக்கத்தை காட்டிலும் அதிகரித்துள்ளது.


இது குறித்து நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “ மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் சார்பில் கூடுதல் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் அந்தஸ்தில் 34 நிதி ஆலோசகர்களில் 14 பேர் பெண் அதிகாரிகள். இந்த பெண் அதிகாரிகள் தான் ஒட்டுமொத்த பட்ஜெட் தொடர்பான 52 சதவீத பணிகளை செய்துள்ளனர்.


குறிப்பாக, நிதிதுறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மனிதவளம், இளைஞர், திறன் மேம்பாடு, விளையாட்டு ஆகிய துறைகளில் இருந்து பெண் அதிகாரிகள் அதிக அளவில் பங்களிப்பு செய்துள்ளனர்.


மேலும், விமானப் போக்கு வரத்து, நகர மேம்பாடு, ரசாயனம் மற்றும் உரம், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, தபால்துறை, சமூக நீதி, அறிவியல் மற்றும் தொழில்சாலை ஆய்வு ஆகிய துறைகளில் இருந்து பல அதிகாரிகள் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஈடுபட்டுள்ள அதிகாரிகளில் 41 சதவீதம் பேர் பெண் அதிகாரிகள் என்று தெரிவிக்கின்றன.