சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொதுமக்களுக்கு ரூ. 5,000 சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பை வகித்து வரும் முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவையில் இன்று 2019-2020-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

அப்போது, மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-லிருந்து ரூ.6,500-ஆக உயர்த்தப்படும். அதேபோல், மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.2,500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார். முக்கியமாக சாலை விபத்து ஏற்படும் போது விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் எனவும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

மேலும், காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் 2 மடங்கு உயர்த்தப்படும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து நீர் நிலைகள் தூர்வாரப்படுவதாகவும் பட்ஜெட் உரையில் முதல்வர் தெரிவித்தார்.