நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் எனும் நிலையில்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளின் 50000 கோடி ரூபாய் கடனை மாநில அரசே ஏற்க முடிவு செய்துள்ளது.

இதற்கான பணிகளை  மாநில அரசு தொடங்கியுள்ளது, எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அரசு அதிகாரிகள் 600 பேரைக் கொண்டு, சுமார் 55 லட்சம் விவசாயிகளை 3 நிறங்களிலான விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்ய வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தவர்களுக்கு ஒரு நிற விண்ணப்பம், ஆதாருடன் இணைக்காதவர்களுக்கு மற்றொரு நிற விண்ணப்பம், சிறு-குறு விவசாயிகளுக்கு ஒரு நிறம் என வெள்ளை, பச்சை, ஆரஞ்ச் என 3 நிறங்களில் விண்ணப்பங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை நிறைவு செய்வதற்கு பிப்ரவரி 5 வரை காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 நாளில் சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்களை கடன் பெற்ற வங்கிகளில் விவசாயிகள் அளிக்க வேண்டும். அதில் நிரப்பப்பட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் குறிப்பிட்ட விவசாயிக்கு அவரது வங்கி கணக்கில் விவசாய கடன் தொகை அரசு சார்பில் செலுத்தப்படும்.

பணம் வங்கி கணக்கை வந்தடைந்து நடைமுறைகளை அனைத்தும் நிறைவடைந்த உடன் விவசாயிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அளிக்கப்படும். அதன் பிறகு விவசாயி வங்கிக்கு நேரடியாக சென்று, கடன் தொகை செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் இந்த அணுகுமுறை விவசாயிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.