ஆந்திர மாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.பி.,க்கள் 5 பேர் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் டெல்லி ஆந்திர பவனில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு  அந்தஸ்து வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் வைத்திருந்த கூட்டணியை முறித்துக் கொண்டதுடன், மத்திய அமைச்சரவையில் இருந்து தங்களது அமைச்சர்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது.

மேலும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பெரும் போரட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் கொண்டுவந்தது.

இதே போன்று ஆந்திராவுக்கு சிறப்பு  அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் முதன்முதலில் பாஜக அரசு மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள்தான் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தனர்

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பி.க்கள் தங்கள் மாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி  நேற்று தங்கள் பதவியை ராஜினாமா  செய்தனர்.

தங்களது ராஜினாமா கடிதத்தை அவர்கள் 5 பேரும் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கொடுத்தனர்.

இதையடுத்து இன்று காலை முதல் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.பி.,க்கள் காலவரைய்ற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். டில்லி ஆந்திரா பவனில் நடக்கும் இந்த போராட்டத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பிறகு கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் , கலந்து கொண்டுள்ளனர்.