கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் ஓர் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியை ஊடகங்களில் தெரிவித்துள்ளார். நாட்டில் ஆண்டுக்கு சாதி மறுப்பு - ‘கலப்புத் திருமணங்கள்’ - ஒரு லட்சத்திற்கும் மேல் நடைபெறும் நிலையில், அவர்களுக்குரிய பரிசுத் தொகையை மத்திய அரசு 2500 தம்பதிக்குக்கூட வழங்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அறவே வழங்காமல், சாதி ஒழிப்பை ஊக்கப்படுத்தாமல் ஓர் அரசு உள்ள நிலையே தொடர்கிறது.

எம்ஜிஆர். முதல்வராக இருந்த காலகட்டத்தில், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அளித்து வந்த பரிசுத் தொகை, ஊக்கங்களை - எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசு அறவே முடக்கிவிட்டது’ என்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியதோடு, அதை மாற்றி புதிய திமுக அரசும், முதல்வரும் சாதி மறுப்பு - ‘கலப்புத் திருமணங்களை’ ஊக்குவித்து, சாதி, தீண்டாமை ஒழிப்பு லட்சியத்திற்கு உதவிடும் வகையில் சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு செய்து தருவதும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.