நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.கவை நெருக்க விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளது.  சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் நமது கட்சியை தலித் கட்சி என்று சொல்வதோடு மட்டும் அல்ல வட மாவட்ட கட்சி என்றும் மக்கள் கூறுவதாக தெரிவித்தனர்.நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி நமது வேட்பாளர்கள் வட மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்று நிர்வாகிகள் பலரும் பேசினர். அதிலும் தென்மாவட்ட நிர்வாகிகளோ, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தான் மதுரை சுற்றுவட்டாரங்களில் கிருஷ்ணசாமி கட்சியை மீறி நம் கட்சியில் தொண்டர்கள் சேருவார்கள் என்றனர். மேலும் கோவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகிகளும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியிலாவது விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதே திருச்சி, தஞ்சை மாவட்ட நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட தங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் தான் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.
நிர்வாகிகள் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்ட திருமாவளவன், இறுதியாக பேசினார். அப்போது எனக்கும் நமது கட்சி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்றே ஆசை உள்ளது. ஆனால் தி.மு.கவாக இருந்தாலும் சரி அ.தி.மு.கவாக இருந்தாலும் சரி ஏன் மக்கள் நலக்கூட்டணியில் கூட நமது கட்சிக்கு கடலூரை தாண்டி தொகுதிகளை தர மறுக்கிறார்கள்.இந்த நிலையை மாற்றவே நான் முயற்சித்து வருகிறேன். ராகுல் காந்தியை இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் நமக்கு கணிசமான தொகுதிகளை பெற முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்று திருமாவளவன் பேசி முடித்துள்ளார். இறுதியாக முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் அழைத்துப் பேசிய திருமாவளவன் தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது 5 தொகுதிகள் வேண்டும் என்று ஆரம்பிக்க உள்ளதாக கூறியதாக சொல்லப்படுகிறது. கடந்த முறை இரண்டு தொகுதிகளில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.