தன்னை சர்ச்சையில் சிக்க வைப்பதற்கான முயற்சியாக போஸ்டரை ஒட்டி சிலர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

தன்னை கவுரவிக்க அனைவரும் பால்கனியில் 5 நிமிடம் எழுந்து நில்லுங்கள் என்று வைரலாகும் போஸ்டரை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தன்னை சர்ச்சையில் சிக்க வைப்பதற்கான முயற்சியாக தோன்றுவதாக கூறியுள்ளார். மேலும், தன்மீதுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழை குடும்பத்திற்கு உதவுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் அந்த போஸ்டரில், ‘பிரதமர் மோடியை கவுரவிக்க, நாட்டு மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள்'. இந்த மனிதர் நமக்காகவும், நமது நாட்டிற்காகவும் எவ்வளவோ நல்லது செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”நரேந்திர தாமோதரதாஸ்ஜி மோடிக்காக 5 நிமிடங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த போஸ்டரை உங்களால் முடிந்த அளவு அதிகளவில் ஷேர் செய்யுங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, என்னை கவுரவப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் 5 நிமிடம் எழுந்து நிற்குமாறு சிலர் பிரசாரம் செய்து வருவதாக ஒரு தகவல் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது என்னை சர்ச்சையில் சிக்க வைப்பதற்கான முயற்சியாக தோன்றுகிறது. 

ஒருவேளை யாராவது நிஜமாகவே என் மீதுள்ள அன்பால், என்னை கவுரப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருந்தால், ஒரு ஏழைக் குடும்பத்தை தத்தெடுங்கள். குறைந்தபட்சம் கொரோனா நெருக்கடி தீரும் வரையாவது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுங்கள். இதை விட வேறு எதுவும் எனக்கு பெரிய கவுரவம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரசால் நடத்தப்படும் தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதி, இந்த போஸ்டரின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்துள்ளது. இதுதொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த போஸ்டரின் கேள்விகுரியதாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் உள்ளது.

அதனால், மக்கள் யாரும் இதனை பெரிதாக பொருட்படுத்திக்கொள்ள வேண்டாம். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறும்போது, இது தன்னை சர்ச்சையில் சிக்கவைப்பதற்கான முயற்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார் என்று அந்த ட்வீட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முந்தைய ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, லட்சக்கணக்கான மக்கள் தட்டுகளில் சத்தம் எழுப்பியும், கை தட்டியும் நன்றி தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, 9 மணிக்கு, 9 நிமிடங்கள் கொரோனா எனும் இருளை அகற்ற, ஒற்றுமையை வெளிப்படுத்த அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.