ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த பதவிக்கு போட்டியிட முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் கணிசமாக பைசாக்களை இறக்கியுள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 8 வருடத்திற்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் முதல் சாதாரண தொண்டன் வரை அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். மாவட்டச் செயலாளர்கள் எம்எல்ஏ, எம்பி பதவிகளை குறி வைப்பார்கள். ஆனால் சாதாரண தொண்டர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் தான் கொண்டாட்டம். காரணம் வார்டு கவுன்சிலர்கள் முதல் மேயர்கள் வரை பதவிகள் கொட்டிக் கிடக்கும்.

அந்த வகையில் 8 வருடமாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று துடியாய் துடித்தவர்களுக்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர்களாகிவிட வேண்டும் என்று தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மாவட்டச் செயலாளர்களை சுத்த ஆரம்பித்தனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர்களும் சீட் தருவதாக கூறி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் முன்னணி கட்சி ஒன்று ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட் கொடுக்க 5 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக சொல்கிறார்கள். இதே போல் இன்னொரு கட்சியும் ஒன்றிய கவுன்சிலருக்கு 5 லட்சம் ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. பிரதான கட்சியான ஒரு கட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 10 லட்சம் ரூபாயும், ஏன்டா தேர்தல் நடத்துகிறார்கள் என்று இருக்கும் கட்சியோ மாவட்ட கவுன்சிலருக்கு ஏழு லட்சம் ரூபாயும் வசூலித்ததாக சொல்கிறார்கள்.

இதே போல் கவுன்சிலரான பிறகு ஒன்றிய குழு தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எனவே 5 லட்சம் ரூபாய், பத்து லட்சம் ரூபாயை எல்லாம் அரசியல் கட்சி பிரமுகர்கள் பெரிதாக நினைக்கவில்லை. இதற்கிடையே மறைமுக தேர்தலுக்கும் தற்போதே கட்சிகள் துண்டை விரித்துவிட்டதாக சொல்கிறார்கள். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான ரேட் 25 லட்சம் ரூபாயில் ஆரம்பமாகிவிட்டதாகவும், ஒன்றிய குழு தலைவர் பதவிகள் 15 லட்சம் ரூபாய் வரை போகும் என்ற பேசிக் கொள்கிறார்கள்.

இதற்கிடையே மறைமுக தேர்தலில் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் லம்பாக அடித்துவிடலாம் என சுயேட்சையாக களம் இறங்கவும் ஒரு குரூப் தயாராகி வருகிறது.