வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்பன உள்ளிட்ட ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழத்தில் நாள்தோறும் சராசரியாக 700 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை 16000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 5-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பதா அல்லது தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு அமைத்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் உட்பட 19 மருத்துவ நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.


அவர்கள் தொடர்ச்சியாக தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு ஊரடங்கு முடியும்போதும் ஆய்வறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கின்றனர். கடந்த முறை முதல்வருடன் ஆலோசனை நடத்தியபின் பேட்டி அளித்த அந்தக் குழுவினர் ஊரடங்கைத் தளர்த்தக்கூடாது என்று தெரிவித்ததாகக் கூறினர்.

அதன் பின்னர் கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றமில்லை. தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சென்னை போன்ற பெருநகரங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. 4-ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, மேலும் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் இன்று மீண்டும் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தளர்வுகள் குறித்து நடத்திய ஆய்வு, மருத்துவப் பரிசோதனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சென்னையில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று, மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு திரும்புவோரால் வரும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது, குடிசைப் பகுதிகளில் பரவும் நோய்த்தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.