திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து ஸ்டாலின்-அழகிரி இடையே மீண்டும் பனிப்போர் தொடங்கியுள்ளது. திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. தனக்கென மிகப் பெரிய ஆதரவு வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிரி, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போதிருந்தே ஸ்டாலின்- அழகிரி இடையே  மிகப் பெரிய பனிப்போர் உருவானது.

பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தபிறகு, அவர்கள் இருவருக்கும் இடையேயான பிரிவு பெரிதானது. பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு தென் மண்டல அமைப்புச் செயலாளர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துக் பொறுப்புகளில் இருந்தும், மு.க.அழகிரி, கருணாநிதியால் நீக்கி வைக்கப்பட்டார்.

அதன்பின் 2016  தேர்தலில் திமுகவுக்கு எதிராக அழகிரி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அழகிரி முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டார். இந்நிலையில்தான் உடல் நலக்குறைவு காரணமாக கருணநிதி கடந்த வாரம் மரணமடைந்தார்.

கருணாநிதி மறைந்த நிலையில் அழகிரி தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் அழகிரியின் அதிரடி என்று ஒரு பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு குடும்பத்துடன் சென்று அஞ்சலி செலுத்திய  அழகிரி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது மன உணர்வுகளை தனது தந்தையின் ஆன்மாவிடம் தெரிவித்தாக கூறினார். தனது திட்டம் இனி போகப் போகத்தான் தெரியும் என்று ஸ்டாலினுக்கு எதிராக அதிரடியாக பேட்டி கொடுத்தார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கம் இருப்பதாக கூறி  பரபப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அழகிரியின் தீவிர ஆதரவானரான பி.எம்.மன்னன், அழகிரிக்கு ஆதரவாக 48 திமுக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றும், திமுகவின் தலைவர் இனி அழகிரிதான் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.

கருணாநிதி மறைந்து ஒரு வாரமே ஆன நிலையில் அழகிரி தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என்றே அரசியல் பார்வையாளர்கள்  கருதுகின்றனர்