தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் தவறானவை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கர்;- தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மற்றொரு புறம் உயர் சிகிச்சைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே மாநிலத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77.8 சதவீதமாக உயா்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாகும். சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக இதுவரை 57 போ் குணமடைந்துள்ளனா். 

கொரோனா வார்டுகளில் ரூ.76 கோடி செலவில் பெரும்பாலான படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 43 மருத்துவா்கள் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் திமுக இளைஞா் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அத்தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளாா். இது கண்டிக்கத்தக்க செயலாகும். ஆதாரமில்லாத தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.