குட்கா போதைப்பொருள் முறைகேட்டில் சிக்கி ஆளும் அதிமுக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சுகாதார துறை அமைச்சர் 
விஜயபாஸ்கர், அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா, சிட்டிங் டிஜிபி டி.கே. ராஜேந்திரன், உணவு தர கட்டுப்பாடு துறை அதிகாரிகள் என 
பல பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி பல ஆவணங்கள் கைப்பற்றியுள்ள்ன. குட்கா முறைகேடு செய்ததில் உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் ஆகியோருக்கும் அரசியல் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கும் 
இடையே புரோக்கராக செயல்பட்டவர் மாதவராவ். 

இவர், ஒட்டுமொத்தமாக குட்கா போதைப் பொருட்களை முறைகேடாக விற்பதற்கு எந்த தடையும் இல்லாமல் இருப்பதற்கு யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தோம் என்பதை புள்ளி விவரம் வாரியாக தனது டைரியில் எழுதி வைத்துள்ளார். இதுதான் சிபிஐ-க்கு கிடைத்த மிக முக்கியமாக கிடைத்த துருப்பு சீட்டாக மாறிப்போயுள்ளது. குறிப்பாக மாதவராவின் டைரியில் HM என்றால் ஹெல்த் மினிஸ்டர் என்றும், PC என்றால் போலீஸ் கமிஷ்னர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மாதம் மாதம் யாருக்கு எவ்வளவு கப்பம் கட்டினோம் என்பதும் அவர் தெளிவாக எழுதி வைத்திருந்தார்.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்தான் ராட்சத குடோன்கள் வைத்து 
மாதவராவ், குட்கா போதைப் பொருட்களை தமிழகம் முழுவதும் சப்ளை செய்து பல நூறு கோடி ரூபாய் பணத்தை போதை 
உற்பத்தியாளர்கள் சம்பாதிப்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். அந்த குடோனில் நடத்தப்பட்ட ரெய்டின் போதே மாதவராவின் டைரி கைப்பற்றப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் முறைகேடாக போதைப்பொருள் விற்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக மாதவராவ் எழுதி வைத்து எல்லோரையும் மாட்ட வைத்து விட்டார். 

இந்த குறிப்புகளில் உண்மை இருப்பதை முழுவதுமாக அலசி ஆராய்ந்து விட்ட சிபிஐ, தனது ஆப்ரேஷனை தொடங்கியது. சுமார் 
ஓராண்டுக்கு மேலான இந்த அதிரடி ஆப்ரேஷனில், கிட்டத்தட்ட 4000 தொலைபேசி உரையாடல்கள் இந்த விவகாரம் தொடர்பாக 
ரெக்கார்டு செய்யப்பட்டு அத்தனை உரையாடல்களிலும் உள்ள முக்கிய பாயின்டுகளை எடுத்து அக்குவேறாக ஆணிவேறாக 
துருவித்துருவி விசாரித்து வருகிறார்களாம். 

இதுமட்டுமின்றி சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், மற்றும் பினாமி சொத்துக்கள் இருப்பதும் இந்த விவகாரத்தில் 
தெரியவந்துள்ளது. எது எப்படியோ... பழைய பூதம் தற்போது கிளம்ப தொடங்கிவிட்டது. உப்பைத் தின்னவன் தண்ணீ குடித்துதான் ஆக 
வேண்டும் என்ற பழமொழி உண்மைதான்போலும். இது மட்டுமின்றி மேலும்பல அதிர்ச்சி தகவல்கள் வரும் நாட்களில் அடுத்தடுத்து 
வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.