4 supreme court judges meet CJ in delhi
உச்சநீதிமன்ற நீதிபதி குறித்து குற்றம் சுமத்திய 4 நீதிபதிகளுக் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்துப் பேசினர். இதையடுத்து அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த 12-ந்தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கும், 4 நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்குள்ளே பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்வார்கள் என்றும், நீதிபதிகளின் அதிருப்தியை, யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்ற நிர்வாகம் வெளிப்படையாகவே நடைபெறுகிறது எனவும் இந்திய பார் கவுன்சில் சங்க தலைவர் மனன் மிஸ்ரா தெரிவித்தார்.

இப்பிரச்சனையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நீதிபதிகளுக்குள் இருக்கும் பிணக்கை சரி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்

இந்நிலையில், புகார் கூறிய 4 நீதிபதிகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று அழைத்து பேசினார்.
இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தனது அறையில் 4 நீதிபதிகளையும் வரவழைத்து சமரசம் பேசினார். நமக்குள்ள பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
