ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் மோசடி செய்த சப்யா சேத் என்ற நகை வியாபாரி உள்ளிட்ட 4 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோடியது தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்திய வங்கித் துறையில் விஜய் மல்லையா விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியே அடங்காத நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி 11,300 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது இந்தியா  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  மோசடி பொது மக்களுக்கு வங்கிகளின் மேல் இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்தது. குறைந்த அளவே கடன் பெறும் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை விரட்டி,விரட்டி கடனை வசூல் செய்யும் வங்கிகள், கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று மோசடி செய்பவர்களை பத்திரமாக வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்துவிடுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போத மல்லையா,  நிரவ் மோடி முறைகேடு தொடர்பாக செய்திகள் அடங்குவதற்கு முன், அடுத்த மோசடி பூகம்பம் வெடித்துள்ளது. டெல்லியில் உள்ள  ஓரியன்டல் வங்கியில், வைர நகை வியாபாரிகளான சப்யா சேத், ரீடா சேத், கிருஷ்ணகுமார் சிங், ரவி குமார் சிங் ஆகியோர் ரூ.389 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டெல்லி துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் என்ற வைர நகைகள் தயாரித்து விற்கும் நிறுவனத்தை நடத்தி வருவர்கள் சப்யா சேத் மற்றும் ரீடா சேத். கூட்டாக நகை வியாபாரம் செய்து வந்த இவர்களும், மற்றொரு நிறுவனத்தின்  நகை வியாபாரிகளான  கிருஷ்ணகுமார் சிங், ரவி குமார் சிங் ஆகிய 4 பேரும் 2007-ஆம் ஆண்டு முதல் ஓரியண்டல் வங்கியில் ரூ.390 கோடி அளவிற்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.

இவர்கள் துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் நிறுவனம் பேரில் மோசடியில் ஈடுபட்டது குறித்து கடந்த 6 மாதங்களாக ஓரியண்டல் வங்கி அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் சிபிஐ தற்போது அந்நிறுவனதின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் என அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது இந்த 4 பேரும் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.