திமுக கூட்டணியில் இருந்து விலகி சட்டப்பேரவை தேர்தலில் 3வது அணி அமைப்பது குறித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தல் முதல் சுமார் 5 ஆண்டுகளாக திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட புதுச்சேரியையும் சேர்த்து காங்கிரசுக்கு பத்து தொகுதிகளை ஒதுக்கியது திமுக. திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையுடன் இருந்து வந்தாலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதாக சொல்கிறார்கள். அதிலும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது ஏன் காங்கிரசை கூட்டணியிலேயே வைத்திருக்க கூடாது என்று மாவட்டச் செயலாளர்கள் வெளிப்படையாகவே ஸ்டாலினிடம் கூறி வருகிறார்கள்.

இதற்கு காரணம் கடந்த 2016 தேர்தல் சமயத்தில் காங்கிரசுக்கு கொடுத்த தொகுதிகளில் பெரும்பாலானவற்றை அதிமுகவிடம் அந்த கட்சி இழந்தது. இதன் காரணமாகவே அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்தது. திமுக – அதிமுக நேரடியாக மோதிய தொகுதிகளில் திமுக அதிக இடங்களில் வென்றது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளை அதிமுக எளிதாக வீழ்த்தியது. இப்படி ஒரு நிலை தான் காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் பல்வேறு முக்கிய கட்சிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டு வருகிறது.

பீகாரிலும் கூட காங்கிரசுக்கு 70 தொகுதிகள் வரை ஒதுக்கிய நிலையில் அதில் 20 தொகுதிகளை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. எஞ்சிய 50 தொகுதிகளில் எளிதாக எதிர்கட்சிகள் வென்றுவிட்டன. இப்படி ஒரு நிலை வரும் தேர்தலில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. எனவே காங்கிரஸ் தவிர்த்து மற்ற கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. அதே சமயம் காங்கிரசுக்கு அதிகபட்சம் 21 தொகுதிகள் தான் என்பதிலும் திமுக பிடிவாதம் பிடிக்கிறது.

இந்த 21 தொகுதிகளை ஏற்கவில்லை என்றால் காங்கிரஸ் கூட்டணிக்கே தேவையில்லை என்று திமுக முடிவெடுத்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத காங்கிரஸ் திமுக கழட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து வருகிறது. அதிலும் 3வது அணி அமைப்பது தான் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க சரியான வியூகமாக இருக்கும் என்று அந்த கட்சி நினைக்கிறது. இதனை அடுத்தே காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் சென்னை சத்தியமுர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.அ ப்போது திமுக கூட்டணியில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகள் நிச்சயம் ஒதுக்கப்படாது என்று அழகிரி வெளிப்படையாக கூறியதாக சொல்கிறார்கள். எனவே சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் புதிய வியூகம் வகுக்க வேண்டும் என்று அழகிரி கேட்டுக் கொண்டதாகவும் இதனை பலரும் ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்கள். குறிப்பாக 3வது அணி என்பதில் பலர் சாதகமான கருத்துகளை தெரிவித்ததாக சொல்கிறார்கள்.

கமல், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சேர்த்தால் 3வது அணி பலமாக இருக்கும் என்றும் பேச்சு அடிபட்டுள்ளது. கமலும் சரி, டிடிவியும் சரி காங்கிரசுடன் நெருக்கமாகவே உள்ளனர். எனவே திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் கமல், டிடிவி உள்ளிட்டோருடன் இணைந்து காங்கிரஸ் எளிதாக மூன்றாவது அணி அமைத்துவிடும். இது குறித்து தான் சத்தியமூர்த்தி பவனில் பல மணி நேரம் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இனி திமுகவிடம் சென்று தொகுதிகளுக்காக நிற்க கூடாது என்று முடிவெடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

ஐந்து ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு மரியாதைக்கு உரிய வகையில் திமுக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அதாவது கடந்த முறை ஒதுக்கிய அதே தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் இல்லை என்றால் மூன்றாவது அணி தான் என்று காங்கிரஸ் முடிவெடுத்துவிட்டதாகவும் மேலிடம் இதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.