வரும் சட்டமன்ற தேர்தலில் முன்றாவது அணி அமையும் வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 
தேர்தல் நெருக்கத்தில் அது உருவாக வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல பகுதிகளில் நேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்த அவர் இவ்வாறு கூறினார். தேன்கனிகோட்டை பேருந்து நிலையத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்த அவரை தொண்டர்கள் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கோட்டைவாசல் என்ற இடத்தை வந்தடைந்தது. இங்கு கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் பழனியப்பன். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தற்போது ஆட்சியில் உள்ளவர்களுடன் கூட்டணியில் உள்ள இரண்டு முக்கிய கட்சிகள் அதிருப்தியில் உள்ளது. இதனால் , அவர்கள் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் 3 முனை போட்டி நிலவும். 

செல்லும் இடமெல்லாம் சின்னம்மா எப்போது வருவார்கள் என ஆர்வமுடன் கேட்கிறார்கள். இது திமுக மற்றும் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் இல்லாத அரசு அமைய வேண்டும் என்பது தான்  மக்களின் விருப்பம் என்பதை நமக்கு காட்டுகிறது. இப்படி ஒரு நிலை உருவாகி உள்ளதை உணர்ந்த இரண்டு அரசியல் கட்சிகள் நம்முடன் கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. அப்போது,  நமது அணி தான் முதன்மை அணியாக இருக்கும் என பழனியப்பன் கூறினார்.