பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாள்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பஸ்நிலையங்களில் இருந்து வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் இயக்கப்படும் 2,225 பஸ்களுடன், சிறப்பு பஸ்களாக 4,950 பஸ்கள் என சென்னையில் இருந்து 16,075 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்..

அதேபோல் பிற ஊர்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களை சேர்த்து தமிழகம் முழுவதும் 30,120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் நெல்லைக்கு 602 பஸ்கள் இயக்கப்படும் என்று கூறினார்..

சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள், கே.கே.நகர். மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சை, விக்கிரவாண்டி, பண்ருட்டி, தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்களும், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்களும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்களும் இயக்கப்படும்.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பஸ்களும், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்களும் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படும்.

முன்பதிவு செய்த பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டசாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு சென்று முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்ய கோயம்பேட்டில் 15 மையங்களும், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லியில் தலா 1 என மொத்தம் 17 முன்பதிவு மையங் கள் நாளை (வியாழக்கிழமை) முதல் 14-ந்தேதி வரை செயல்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்பி வர வசதியாக 16-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.