அதானியின் பெயரால் உள்ள ஒரு துறைமுகத்தில் இப்படிப்பட்ட ஒரு தேச விரோதச் செயல் நடந்து இருக்கிறது.
அண்மையில் குஜராத் முந்த்ரா போர்ஸ் அதானி துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ஏன் அரசு இதுவரை எந்த நீதி விசாரணைக்கு ஆணையிடவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி மக்களவையில் “ போதைப்பொருள் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு சவாலாக இருக்கிறது. இளம் தலைமுறையினர் பாழாகும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மது பழக்கத்தால் இளைஞர்கள் ஏன் இளம்பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களிலும் இப்போது அது பரவி வருகிறது. மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படுகிற இந்த சமூகம் ஹெராயின் போன்ற போதைப் பொருட்களாலும் பாதிக்கப்படும் அவலம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாம் எவ்வளவு கடுமையான சட்டங்களை போட்டாலும் கூட அந்த சட்டங்களால் இந்த மாஃபியா கும்பலின் நடவடிக்கைகளை போதை பொருளை கடத்தி வியாபாரம் செய்யக்கூடிய இளம் தலைமுறையை பாழாக்கிக் கொண்டிருக்கிற மாஃபியா கும்பலை கட்டுப்படுத்தக்கூடிய நிலை இல்லை என்பது வேதனை அளிக்கிறது. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அடுத்த தலைமுறையினரை இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்கு பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்கிற வேண்டுகோளை நான் முதலில் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அண்மையில் குஜராத் முந்த்ரா போர்ஸ் அதானி துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதை நாடு அறியும். அது ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஊடகங்களில் நாம் அறிந்தோம். யார் கடத்தினார்கள் எதற்காக அது இங்கே இறக்குமதி செய்யப்பட்டது, அதற்கு பொறுப்பானவர்கள் யார், கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மிக சாதாரணமான ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இவ்வளவு பெரிய ஒரு போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடும் கூடியவர்கள் யார் அந்த பின்னணி என்ன என்பதை அரசு அறிவிக்க வேண்டும், நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதானியின் பெயரால் உள்ள ஒரு துறைமுகத்தில் இப்படிப்பட்ட ஒரு தேச விரோதச் செயல் நடந்து இருக்கிறது. ஆப்கானிஸ்தான் என்பதுதான் தாலிபான்களின் கைகளில் உள்ள ஒரு நாடு, அங்கிருந்து இந்தியாவுக்கு எப்படி இவ்வளவு பெரிய அளவில் மூன்று டன் அளவிலான ஹெராயின் வந்து இறங்கியது எங்கே போனது. இது தொடர்பாக ஏன் அரசு இதுவரை எந்த நீதி விசாரணைக்கு ஆணையிடவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதுகுறித்து குரல் எழுப்பியும் கூட அரசு மவுனம் காப்பது ஏன் என்கிற கவலை மிகுகிறது. இது செப்டம்பர் மாதத்தில் நடந்தது என்றால், ஜூன் மாதத்தின் 25,000 கிலோ ஹெராயின் இந்தியாவுக்குள் வந்து இறங்கி இருக்கிறது அது எங்கே போனது. இப்படி போதை பொருட்களால் இந்த தேசம் பாழாகிக் கொண்டிருக்கிறது, இளம் தலைமுறையினர் அழிந்து கொண்டிருக்கிறார்கள். வாழ வேண்டிய இளம் பருவத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது. பள்ளிகளிலும், கல்லூரி வளாகங்களிலும், நகர்ப்புறங்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள் ஏழை-எளிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில், மீனவர்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெளிப்படையாக போதைப் பொருட்கள் வியாபாரம் ஆகின்றன.
ஆகவே, இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த அதானி துறைமுகத்தில் கடத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட ஹெராயின் தொடர்பான குற்ற புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையிலான ஒரு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தனியார் மயப்படுத்தும் என்பது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கு தனியார் துறைமுகங்கள் பயன்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
