தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளில் ஆளும் கட்சியினர் தலையிட்டு 30 சதவீதம் கமிசன் கேட்டு மிரட்டுவதால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடி வருகிறது. இதனை வரும் ஆண்டுகளில் சரி செய்ய தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை சீரமைக்கவும், புனரமைக்கவும், தூர்வாறவும் தமிழக அரசு முடிவெடுத்தது. குடிமராமத்து திட்டம் என்று பெயர் சூட்டப்படடு சுமார் 500 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் நிலைகளுக்கு ஏற்பட்ட மாவட்டம் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் முதல் அதிகபட்சம் 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

குடிமராமத்து தேவைப்படும் நீர்நிலைகளை கண்டறிந்து அவற்றை தூர்வாறி நீர் நிரப்ப வழி ஏற்படுத்துவது தான் குடிமராமத்து பணிகள். வழக்கமாக இந்த தூர் வாறும் பணிகளை டெண்டர் விட்டு மாவட்ட நிர்வாகம் நேரடியாக கையாளும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் ஒவ்வொரு ஊரிலும் இருக்க கூடிய ஆயக்கட்டுக்காரர்கள் என்று கூறப்படுபவரிடம் பணிகளை நேரடியாக ஒப்படைத்தார். 

இதன் மூலம் அவர்கள் சிக்கனமாக செலவு செய்து நீர்நிலைகளை சரி செய்வார் என்று எதிர்பார்த்தார். அதன்படி கடந்த ஆண்டு வரை இந்த குடிமராமத்து பணிகள் எவ்வித தொய்வும் இன்றி நடைபெற்றது. ஆனால் தற்போது அந்த ஆயக்கட்டுக்காரர்களை அணுகும் ஆளும் கட்சியினர் வந்த நிதியில் 30 சதவீதம் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டு மிரட்டுவதாக கூறுகிறார்கள். தர மறுத்தால் குடிமராமத்து பணிகளை நடக்கவிடாமல் தடுப்பதாகவும் கூறுகிறார்கள். 

கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கலெக்டரை நேரில் சந்தித்து குடிமராமத்து பணிகளுக்கு கமிசன் கேட்டு ஆளும் கட்சியினர்மிரட்டல் விடுப்பதாக வெளிப்படையாக புகார் அளித்தனர். இதே நிலை தான் பெரும்பாலான மாவட்டங்களில் நீடிப்பதாக சொல்கிறார்கள். இதனால் மற்ற பணிகளை போலவே குடிமராமத்து பணிகளும் பாதிக்கப்படக்கூடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.