விருதுநகரில்  3 வயது சிறுமி  மற்றும் 10 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அனைவரும் விருதுநகர் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியா முழுவதும்  கொரானா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  கடந்த சில நாட்களாக  நாளொன்றுக்கு குறைந்தது 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது , பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது . நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது ,  இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 183 பேர் உயிரிழந்துள்ளனர் . இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார்  6088 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 148 பேர் உயிரிழந்துள்ளனர் .  

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரத்து 967பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மொத்தத்தில்  94 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மகாராஷ்டிரா , மாலத்தீவு போன்ற பகுதிகளில் வேலைக்கு சென்று இருந்தனர் , தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிரா , மாலத்தீவு போன்ற பகுதிகளிலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு சுமார் 900 பேர் திரும்பியுள்ளனர் . அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த  38 வயது நபர் மற்றும் அவருடைய மனைவி, 10 வயது மகன்,  3 வயது மகள், 58 வயது தந்தை உள்ளிட்டோர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தனர்.  அவர்கள் விருதுநகரில் தனியார் கல்லூரியில் தனிமைபடுத்தப்பட்டனர், அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 3 வயது சிறுமி உள்பட 5 பேருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 5 பேரும் விருதுநகர் தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களாக விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆதிகரித்து வருவதால் விருதுநகர் மாவட்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர், அம்மாவட்டத்தில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக பதிவாகி உள்ளது.