புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் செல்ல உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. நியமன எம்எல்ஏக்கள் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்துவிட்டார். 

பாஜகவை சேர்ந்தவர்கள் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ வழக்கு தொடர்ந்தார். இதில் மத்திய அரசு நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என தெரிவித்தனர். 

ஆனாலும் 3 பேரையும் சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வந்தது. அப்போது பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரையும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்குமாறு புதுச்சேரி சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.