பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இட மாற்றம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம். 

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான 17.09.2020 அன்று கடலூர் புது நகரில் காவல் நிலையத்தில் காவலர்களாகப் பணியாற்றிய ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இருக்கிறார்கள். பெரியார் சிலையின் கீழ் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்தை இணையதளத்திலும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனைச் சகித்துக்கொள்ள இயலாத காவல்துறை உயர் அதிகாரிகள், அவர்களை கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் பெருமளவில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுக்க போராடிய பெரியார் அவர்களின் சிலைக்கு நன்றி உணர்ச்சியோடு மாலை அணிவிப்பதும், மரியாதை செலுத்துவதும் சட்ட விரோதச் செயலா? ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய செயலா?

பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் நடைபெறுவது என்பது கண்டனத்துக்கு உரியது. உடனடியாக அந்தக் காவலர்களின் இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட வேண்டும் என்றும், காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் தவறான அணுகுமுறையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்  என அதில் கூறப்பட்டுள்ளது.