3 arrested including fake reporter

தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதாக கூறி ரூ.10 லட்சம் வரை பணம் வசூலில் ஈடுபட்ட போலி நிருபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாவட்ட தலைநகரங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எம்ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேனி மாவட்ட அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் சிலர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்த உள்ளதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பதாகவும் கூறி நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அரசு அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் என பல்வேறு தரப்பிலும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. நோட்டீஸ் விநியோகம் செய்து இதுவரை 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதாக கூறி வசூல் செய்யப்பட்டது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம், இது குறித்து விசாரிக்க தேனி மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார். துணை முதலமைச்சரின் உத்தரவை அடுத்து, இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். விசாரணையின்போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதாக கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரின் பெயர் குரு சீனிவாசன் என்பதும், தன்னை நிருபர் என்று கூறிக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, குரு சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். தனக்கு உதவியாக வசூல் வேட்டையில் சாதிக்பாட்ஷா, செல்வராஜ், ஜான்மணி ஆகியோர் ஈடுபட்டதாகவும் குரு சீனிவாசன் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து சாதிக்பாட்ஷா, செல்வராஜ், ஜான்மணி
ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.