மகனை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பிய கையோடு தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பையும் அதிரடியாக அரசியலில் களமிறக்கி இருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

ஓ.பி.எஸின் முதல் மகன் ரவீந்திர நாத் குமார். இரண்டாவது வாரிசு ஜெயபிரதீப். மக்களவை தேர்தலில் ரவீந்திர நாத்தின் வெற்றி கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் சென்னையில் உள்ள தனது நண்பர்களை தேனியில் களமிறக்கி விட்டு அதிரடியாக களப்பணியாற்றி, மக்களையும், நிர்வாகிகளையும் கவரும் வகையில் அண்ணன் ரவீந்திர நாத்தை வெற்றி பெற வைத்ததே தம்பி ஜெயபிரதீப் தான் எனக் கொண்டாடி வந்தது ஓ.பி.எஸ் குடும்பம்.

 

மகனை எம்.பி.,யாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்த கையோடு அடுத்து உள்ளூர் அரசியலில் தனது இரண்டாவது வாரிசு ஜெயபிரதீபையும் களத்தில் இறக்கி விட்டு இருக்கிறார் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் குமார் டெல்லியில் முகாமிட்டு இருக்க, தேனி மாவட்டம் முழுவதும் பம்பரமாய் சுழன்று வருகிறார் ஜெயபிரதீப். தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் சுழன்று வரும் அவர் கண்மாய்களை சீரமைப்பது, கரையை உயர்த்துவது, நீர்வரத்து கால்வாய்களை சுத்தபடுத்தும் பணிகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை சொல்லி வருகிறார். 

மாணவ- மாணவியர்களுக்கு இலவச நோட்டு பேனா வழங்குவது, மக்களுக்கு இலவச உணவு வழங்குவது என தொகுதி மக்களை விழுந்து விழுந்து கவனித்து வருகிறார். ஆதரவாளர்களில் சுப- துக்க நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்று வருவதை கட்டாயமாக வைத்துள்ளார். 

அவரது ஆதரவாளர்கள் ஜெயபிரதீபை ‘இளம் அரசியல் ஜாம்பவான்’ ’ஆன்மீகச் செம்மல்’ என அடைமொழியோடு அழைத்து வருகிறார்கள். அத்தோடு மட்டுமல்லாது தேனி சுற்று வட்டாரப்பகுதிகள் கோயில் கும்பாபிஷேகங்களை நடத்துவது, முடிந்தவரை அப்பகுதிகளில் உள்ள சாமியார்களை சந்தித்து ஆலோசனை கேட்பது என பாதி அரசியல்வாதியாகவும், மீதி ஆன்மீகவாதியாகவும் பிஸியாக இருக்கிறார் ஜெயபிரதீப். 

சமீபத்தில் பெரியகுளம், குள்ளப்புரம் பகுதியைச் சேர்ந்த அமமுக 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து ஜெயபிரதீப் தலைமையில் தான் அதிமுகவில் இணைந்தனர். அந்தளவுக்கு அதிமுகவில் முக்கியப்புள்ளியாக உருவெடுத்து வருகிறார் ஜெயபிரதீப். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆன்மீகச் செம்மல் ஜெயபிரதீப் களமிறக்கப்பட்டு தமிழக அமைச்சரானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.