பொன்னேரி அருகே சிதிலமடைந்த அரசு தொடக்கப் பள்ளியை சீரமைக்க வலியுறுத்தி 2ஆம் வகுப்பு மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சிதிலமடைந்த அரசு தொடக்கப்பள்ளியை சீரமைக்க வலியுறுத்தி 2ஆம் வகுப்பு மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி சிவன் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பொன்னேரியை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பாஸ்கரன் என்பவரது 6 வயது மகள் அதிகை முத்தரசி இந்தப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் 2ஆம் வகுப்பு மாணவி அதிகை முத்தரசி தமது பள்ளியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். 

அதில் தமது பள்ளி சிதிலமடைந்து இருப்பதாகவும், தரை பெயர்ந்து உள்ளதாகவும், பள்ளியின் பின்பகுதியில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தவுதாகவும், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் தங்களது பள்ளியை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வரை மனுஅளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், உடனே தமது பள்ளியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்றும், கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது பள்ளியை சீரமைத்து தருமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.