2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை வழக்குகள் தொடர்ந்தன. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. 

இந்த வழக்கை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் 2ஜி மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சிபிஐ மனு தொடர்பாக பதிலளிக்க ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்ட 14 பேருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு ஜூலை 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.