முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவமரியாதையாக ராசா தொடர்ந்து பேசினால், ராசாவின் பின்னணிகளை நாங்கள் எடுத்துக் கூற வேண்டி இருக்கும், ராஜா ராணி கதைகளையெல்லாத்  நாங்கள் வீடுதோறும் எடுத்துக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். எனவே ராசா எச்சரிக்கையுடன் நாவை அடக்கி பேச வேண்டும் என அதிமுக அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி  எச்சரித்துள்ளார்.

நேற்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:  அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுக என்ற மிகப்பெரிய கட்சியை இன்றைக்கு கருணாநிதி குடும்பம் அதிகரித்துக் கொண்டுள்ளது. திமுக ஆட்சியில் என்ன நடந்தது, கலைஞர் ஆட்சியில் என்ன நடந்தது என்று நாட்டுக்கே தெரியும். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியும் என்ற நிலையை மு.க ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று எங்கு பார்த்தாலும் எடப்பாடியாரின் அலை வீசுகிறது. சாலையில் காரில் சென்று கொண்டிருந்தவர் சாலையில் நின்று கொண்டிருந்த மணமக்களை இறங்கி வாழ்த்திய ஏழை மக்களின் சாதாரண முதல்வராக எடப்பாடியார் திகழ்கிறார். பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு எளிமையான முதல்வரை இன்று தமிழகம் பெற்றுள்ளது. 

இரவு 12 மணிக்கு மதுரை வந்து விடிய விடிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, காலை எழுந்து கட்சிப் பணி, ஆட்சிப் பணியில் எடப்பாடியார் ஈடுபட்டுள்ளார். மு.க ஸ்டாலின் இரவு 10 மணிக்கு மேல் வெளியே வர முடியுமா?  மக்கள் பணியில் முதல்வர் எடப்பாடி யார் மிகவும் ஆர்வமாக உள்ளார். தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல், உடலைப் பற்றி கவலைப்படாமல், நாட்டு மக்கள் நலனே என்று எடப்பாடியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதைத் தடுப்பதற்கு மிகப்பெரிய சதித்திட்டம் நடக்கிறது, திட்டமிட்டு மாவட்டம்தோறும் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்கள். 

இனி எங்களது முதல்வரை அவமரியாதையாக ராசா தொடர்ந்து பேசினால் ராசாவின் பின்னணிகளை நாங்கள் எடுத்துக் கூற வேண்டியிருக்கும். ராசா- ராணி கதை எல்லாம்  நாங்கள் வீடு தோறும் எடுத்துக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ராசா எச்சரிக்கையுடன் நாவை அடக்கி பேச வேண்டும். எடப்பாடியாரை ஒருமையில் பேசினால், கழகத்தினர் ஒவ்வொருத்தருக்கும் திமுக தலைவர்கள் பதில்  சொல்லியாக வேண்டும். தமிழர்கள் தலை நிமிர வேண்டுமென்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் எடப்பாடியாரை தரக்குறைவாகப் பேசினால், முகஸ்டாலின் எங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களிடம் பாவமன்னிப்பு திமுக தான் கேட்க வேண்டும். ஆ.ராசாவின் கேஸ் இன்னும் முடியவில்லை 2ஜி வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது, ஜனவரியில் ராசா ஜெயிலுக்குப் போவது உறுதி. அவர் இவ்வாறு பேசினார்.